குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை,
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை,
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்,
கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத்,
தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.
வரி பொருள்
வெட்சிப் போரில் பகைவரை வென்று நிரைகளை மீட்ட வீரனின் கருங்கை வாள் எதிரிகளை வெட்டிய புகழுடன் திரும்பியுள்ளது. போருக்குப் பின் நடைபெறும் உண்டாட்டில் அவனது வீரச்செயலை நினைவுகூர்ந்து கள்ளை வாழ்த்திக் கொண்டாடுகின்றனர்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது