கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு,
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே
அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை,
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.
வரி பொருள்
முன்பு தலைவன் பலரோடு கூடி உண்ட பரந்த இல்லத்தில், அவன் மறைந்தபின் மனைவி கைம்மை நோன்புக்காகச் சுளகளவு சிறிய இடத்தைச் சாணத்தால் மெழுகுகிறாள்; அவள் கண்ணீர் அந்தச் செயலில் கலக்கிறது எனப் புலவர் இரங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது