தொடியுடைய தோள் மணந்தனன்,
கடி காவில் பூச் சூடினன்,
தண் கமழும் சாந்து நீவினன்,
செற்றோரை வழிதபுத்தனன்,
நட்டோரை உயர்பு கூறினன்,
வலியரென வழிமொழியலன்,
மெலியரென மீக்கூறலன்,
பிறரைத் தான் இரப்பு அறியலன்,
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்,
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்,
வருபடை எதிர் தாங்கினன்,
பெயர் படை புறங்கண்டனன்,
கடும் பரிய மாக் கடவினன்,
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்,
ஓங்கு இயல் களிறு ஊர்ந்தனன்
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்,
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்,
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படுவழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே.
வரி பொருள்
நம்பி நெடுஞ்செழியன் காதல், அலங்காரம், நட்பு, பகை, தன்னம்பிக்கை, ஈகை, அரசவைக் புகழ், போர், குதிரை-தேர்-யானைச் செல்வம், பாணர்ப் பேணல், தெளிவான சொல் என வாழ்வில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தவன். ஆகவே அவன் உடலை புதைத்தாலும் சுட்டாலும் எது நேர்ந்தாலும் நேரட்டும்; அவன் புகழ் நிறைந்த வாழ்வு முழுமை பெற்றது எனப் புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது