கந்துமுனிந்து உயிர்க்கும்யானையடு,பணைமுனிந்து,
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்,
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோர் இன்சா யலனே ;
வரி பொருள்
கம்பத்தைக் கடிந்து நெட்டுயிர்க்கும் யானைகளும், பந்தியை வெறுத்துக் காற்றைப் போல் இயங்கும் குதிரைகளும் உள்ள மணல் நிறைந்த முற்றத்துக்குச் சான்றோர் வந்தால், அவர்கள் அப்பொழுது உண்ண மறுத்தாலும் ‘நீங்கள் உண்ணாவிட்டால் நானும் உண்ணேன்’ என்று தன்னுடன் சூளுறச் செய்து உணவுண்ணுமாறு வேண்டிக்கொள்ளும் அளவுக்கு கீரஞ்சாத்தன் எம்மைப் போன்றோரிடம் இனிய மென்மையுடையவன்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது