மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப,
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்;
வரி பொருள்
மரையான் தின்ற நெல்லியின் கொட்டைகள் கிடக்கும் முற்றங்களும், வேட்டுவர்கள் வாழும் சிற்றூர்களும் கொண்ட மலைநாட்டில் கடுந்துடியின் முழக்கம் பேராந்தையின் ஒலியோடு எதிரொலிக்கிறது. அத்தகைய நாட்டின் கூர்வேலுடைய பிட்டனைப் பகைவர்கள் அணுகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புலவர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது